Sunday, December 18, 2011

கூடங்குளம், முல்லை பெரியாறு -ஜோதிட தீர்வா?


சோதிடத்தை நம்பிக் கெட்டவர்கள்!

சோதிடர் சொல்லுகிறபடி நடக்காத போது ஏன் சோதிடத்தை நம்ப வேண்டும் - பொருத்தம் ஏன் பார்க்க வேண்டும்?

சோதிடத்தை முழுமையாக நம்பிக் கொண்டு அன்றாட வாழ்வில் ஒவ்வொரு செயலுக்கும் சோதிடத்தின் வழிகாட்டலோடு தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருப்பவர்கள் நாட்டில் நிறைய பேர் உண்டு! 

அப்படி சோதிடத்தை நம்பி வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் வாழ்வு சோதிடர் சொன்னபடி சிறப்பாகஅமைந்ததா?

தினமணி நாளிதழில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காலம் உங்கள் கையில் என்ற சோதிடப்பகுதி வெளியிடப்படுகிறது. அப்பகுதியில் மக்கள் தங்கள் துன்ப துயரங்களைக் கூறி என் கஷ்டம் தீருமா? நோய் தீருமா?பரிகாரம் உண்டா? திருமணம் நடைபெறுமா? வேலை கிடைக்குமா? என்றெல்லாம் கேட்டு எழுதுகின்றனர். அவற்றில் ஒன்றை மட்டும் எடுத்துக் கொள்வோம்.

பொருத்தம் என்றார் சோதிடர் - தனித்து வாழ்கிறார் பெண்!சோதிட நம்பிக்கை கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தபெண்ணுக்கு கணவரின் சாதகத்தோடு பொருத்தம் பார்த்து,மிகவும் சரியான பொருத்தம் வாழ்வு சிறப்பாக அமையும்10 பொருத்தத்தில் பத்தும் நன்றாகயிருக்கிறது என்றெல்லாம் சோதிடர் சொல்லிய பிறகு நாள்,நட்சத்திரம், லக்கினம் என்றெல்லாம் மங்கலகரமான நேரம் பார்த்து திருமணம் நடைபெற்றது. 

சில ஆண்டுகளுக்குப் பிறகு அப்பெண் என்னுடைய கஷ்டம் தீருமா என்று கண்ணீர் சிந்தி 6.4.2001-இல் தினமணி சோதிடர் பகுதிக்கு தபால் எழுதியிருக்கிறார்.

அதில் என் கணவரால் பலவிதக் கொடுமைகளுக்குஆளாக்கப்பட்ட நான் தற்போது 7 வயது மகனுடன் தனித்து வாழ்ந்து வருகிறேன். என் கஷ்டம் தீருமா? என்று சோதிடரிடம் கேட்டிருக்கிறார்.

அப்பெண்ணின் சாதகத்தை ஆராய்ந்து பார்த்து அவர்வாழ்க்கை சிறப்பாக அமையுமென்றார் சோதிடர்! ஆனால் கணவரால் சித்திரவதைக்குள்ளாகி தனிமையில் கஷ்டப் படுகிறார்! 

பொருத்தம் பார்த்த சோதிடரைக் கேட்டால், இதெல்லாம் பூர்வ பாவ புண்ணியத்தால் அல்லது தோஷத்தால்இவ்விதம் நடைபெறுகிறது என்று கூறி தப்பித்துக் கொள்வார்!

பூர்வ பாவ புண்ணியத்தால் எல்லாம் நடக்குமென்றால் பிறகு ஏன் சோதிடம் பார்த்தபோது பொருத்தம் நன்றாக இருக்கிறதென்று சொல்ல வேண்டும்.

சோதிடம் பார்த்துத் திருமணம் செய்து கொண்டஅப்பெண்ணின் வாழ்க்கை சிறப்பாக அமையாமல் போனது போல் ஏராளமான பெண்களின் வாழ்க்கையும் அவ்விதம் கஷ்டப்படும் நிலையில் இருக்கக் கூடும்! 

சோதிடர் சொல்லுகிறபடி நடக்காத போது ஏன் சோதிடத்தை நம்ப வேண்டும் - பொருத்தம் ஏன் பார்க்க வேண்டும்?

சோதிடப் பொருத்தம் சோகத்தில் முடிந்தது

23.1.2005 ஸ்ரீரங்கம் திருமண மண்டபத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் மணமகன் குருராஜன் தீயில் கருகி பலியானார். மணமகள் ஜெயஸ்ரீ பலத்த தீக்காயங்களுடன் தப்பித்தார். இவ்விபத்தில் 55 பேர் பலியானார்கள். 

இக்கோரவிபத்தால் தமிழ்நாடே சோகத்தில் மூழ்கியது. இந்தக் குடும்பமும் அய்தீக குடும்பந்தான். அய்தீக ஆசாரப்படி மணமக்களின் ஜாதகத்தை துல்லியமாக அலசி ஆராய்ந்து பார்த்து திருமணம் பேசி முடிக்கப்பட்டு, நாள் நட்சத்திரம் பார்த்து சோதிடர் குறிப்பிட்ட நல்ல நேரத்தில் திருமணம் நடைபெற இருந்த போதே மணப்பந்தல் தீப்பிடித்து மணமகன் பலியாகி, மணமகள் தீக்காயமுற்று உறவினர்கள் 55 பேர் இறந்து விட்டனர். திருமணப் பொருத்தம் பார்த்த சோதிடர் இதற்கு என்ன பதில் கூறுவார்?

தனி மனிதன் வாழ்வையும், துல்லியமாகச் சோதிடத்தில் கூற முடியும் என்று நம்புகிறவர்கள் இதற்கு என்ன காரணம் சொல்லுவார்கள்? 

சோதிடக் கணிப்பில் இந்தக் கோர சம்பவம் நடக்குமென்று தெரியாமல் போய்விட்டதா! சோதிடம் நம்பத் தகுந்ததல்ல என்பதை இனியாவது புரிந்து கொள்ளுங்கள்?

சோதிடத்தை நம்பி கருவைக் கலைத்தார்!ஒருவருக்குத் திருமணமாகி 4 ஆண்டிற்குப் பின் அவரதுமனைவி கருவுற்றார்! கணவர் சோதிடரை அணுகி தனக்குக் குழந்தை பிறந்தால் என் ராசி எப்படி இருக்கும் என்று கேட்டிருக்கிறார். இது முதல் குழந்தை ஆகவேராசிப்படி உடல் குறைபாடு உள்ளதாகப் பிறக்கும் என்று சோதிடர் சொல்ல அதை நம்பிய கணவர் உடனடியாகக் கருவைக் கலைக்க ஏற்பாடு செய்துவிட்டார். 

கருவைக் கலைப்பதில் தவறு ஏற்பட்டு மனைவிக்கு உடல் நலம் பாதித்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள். சோதித்த மருத்துவர்கள் கர்ப்பப்பை மிகவும்பாதித்திருக்கிறது. அதை எடுத்து விட வேண்டுமென்று கூறி மனைவியின் கர்ப்பப்பையை எடுத்து விட்டார்கள். 

சோதிடர் சொன்னதைக் கேட்டு முட்டாள் தனமாக நடந்து கொண்டதால் இனி குழந்தை பெற முடியாத அளவிற்கு கர்ப்பப்பையை எடுக்கும் நிலை ஏற்பட்டு விட்டது. இச்செய்தி 22.1.2006 தினத்தந்தி குடும்பமலரில் வந்துள்ளது.

உதாரணத்திற்குத்தான் ஒன்று இரண்டு சம்பவங்கள் இங்குகுறிப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளன. இதுபோன்று சோதிடத்தை நம்பி பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம் உள்ளனர்.


பொருத்தம் பார்த்த இலட்சணம்!12.11.2006-இல் தினமலரில் வந்த செய்தி. சங்கீதாவின்தந்தை, மகளுக்கு மாப்பிள்ளை தேடினார். சங்கீதாவின் சாதகத்தில் செவ்வாய்தோஷம் இருப்பதாகக் கூறியிருக்கிறார் சோதிடர்! 

சென்னைக்கு அருகிலுள்ள ஓர் ஊரில் வசதி படைத்த இராசு என்பவரின் சாதகம் சங்கீதாவின் சாதகத்துடன் மிகவும் பொருத்தமுடையதாக இருக்கிறது என்று சோதிடர் சொல்ல திருமணம் பேசி தடபுடலாக நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு சங்கீதா பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளானார்! சோதிடர் பொருத்தம் பார்த்துச் சொன்ன அந்தமாப்பிள்ளை ஆண்மையில்லாதவர்!

வாழ்க்கையின் நுணுக்கங்களைக் கூட சாதகத்தால்கணித்துச் சொல்ல முடியும் என்று கூறும் சோதிடர்கள் பொருத்தம் பார்த்துச் சொன்ன இலட்சணம் இப்படி! 

சங்கீதாவின் வாழ்க்கையைப் போல் சோதிடர்களால்பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம், ஏராளம்!

இன்று சிலபோலிகள் பத்திரிகைகளில் கூடங்குளம், முல்லை பெரியாறுக்கும் ஜோதிடத்தில் தீர்வு சொன்னதை பார்த்து சிரிப்புதான் வந்தது   
நன்றி-பார்தி 

1 comment:

  1. சோதிடப்புரட்டை அக்கு வேறு ஆணி வேறாக பிட்டு வைத்துள்ளீர்கள்..தொடரட்டும் உங்கள் பகுத்தறிவுப்பணி..
    ஆ.ஈசுவரன்/திருப்பூர்.

    ReplyDelete